Daily Devotion
- Sep 16, 2016
- 1 min read
இன்றைய தியானம் 16-09-2016
“…விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” - நீதி. 16:18

ஒரு தேவஊழியர் தரிசனத்திலே, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பவராகக் கண்டார். ஒரு மனிதன் பெரிய சுத்தியலைக் கொண்டு அவரது மென்மையான கைகளில் வேதனையுண்டாக்கும்படி ஆணிகளை அறைந்துகொண்டிருந்தான். அந்த சுத்தியலின் மீது பெருமை என்று எழுதப்பட்டிருந்தது. அவன் ஒவ்வொருமுறை அடிக்கும்போதும் சிலுவையே அதிர்ந்தது. ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோ மென்மையான குரலில் அவனிடம், “என் பிள்ளையே இன்னும் நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறினார். அம்மனிதனோ செவிடனைப்போல, தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருந்தான். இதைக் கண்ட தேவஊழியர், “இந்த மனிதன் எத்தனை பயங்கரமான பொல்லாத பாவியாக இருக்க வேண்டும்” என்று தனக்குள் சிந்தித்து இயேசுவண்டை சற்று நெருங்கி வந்தார். அருகில் வந்து உற்று கவனித்தபோது, தானே அந்த பொல்லாத மனிதன் என்பதையும் இயேசுவை சிலுவையில் அறைந்த அந்த பெருமையின் சுத்தியல் தன் “சுயமே” என்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இத்தரிசனம் அவரை உணர்வடையச் செய்து, மனந்திரும்புதலுக்கும் மனமாற்றத்திற்கும் வழிநடத்தியது.
பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஊழியத்திலும் கிரியை செய்திருக்க, நாமோ கர்த்தருக்கு மகிமையை செலுத்தி, மறைந்து தாழ்மையாய் வாழாமல், நம்மையும் அறியாமலே பெருமைக்கு இடம் கொடுத்து விடுகிறோம். என் மூலம் இத்தனைபேர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள், இத்தனைபேர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று டமாரம் அடித்து, கடைசியில் சுயம் தலைதூக்க இடம் கொடுத்துவிடுகிறோம்.
ஒருமுறை டி.எல். மூடியிடம், “உங்கள் மூலம் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்?”என்ற கேள்வி கேட்கப்பட்டது. அவர் தாழ்மையாக, “கணக்குப் பார்க்க ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம் என்னிடத்தில் இல்லை. நான் பிரயோஜனமற்ற ஊழியக்காரன்” என்றாராம். தேவன் இவரை கடைசிவரை வல்லமையாக பயன்படுத்த இதுதான் இரகசியம்.
அன்பான தேவபிள்ளையே! நீங்களும் கூட ஒருவேளை இயேசுகிறிஸ்துவை பெருமை என்னும் சுத்தியலால் அறைந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதை அறியாமல், “நான் மிகச்சிறந்த தேவபிள்ளை” என்று உங்களைக் குறித்து எண்ணக்கூடும். தேவன்தாமே உங்கள் இருதயத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் பெருமையைக் காணும்படி உன் ஆவிக்குரிய கண்களைத் திறப்பாராக.











Comments