Daily Devotion
- Sep 15, 2016
- 1 min read
இன்றைய தியானம் 15-09-2016
“...இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே...”
யோவான் 8:11.

இன்றைய வேதப்பகுதியிலே, விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் குறித்து வாசிக்கிறோம். அவளை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து நிறுத்தி, அவளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க இயேசுவினுடைய கையில் நியாயத்தீர்ப்பு என்னும் கல்லை கொடுக்கிறார்கள். அங்கே நின்றவர்களில் அவள் மேல் கல்லெறிய தகுதியான ஒரே நபர் இயேசுகிறிஸ்துதான். ஆனால் அவரோ, “நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை” என்று சொல்லி, மரண தண்டனையைக் கொடுக்காமல், குறைந்தபட்ச தண்டனையாக வார்த்தையால் சிறிய காயத்தைக்கூட ஏற்படுத்தாமல், தன்னுடைய கையில் கொடுக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு என்னும் கல்லை அப்பெண்ணின் மீது எறியாமல் தரையிலே எறிந்துவிட்டார். நம்முடைய அன்றாட வாழ்விலும் கூட குடும்பத்திலோ, வேலை செய்யும் அலுவலகத்திலோ, ஊழியம் செய்யும் இடத்திலோ தவறு செய்தவர்களைப் பார்க்கும்போது எப்படி நடந்துகொள்கிறோம்? அவர்களை எல்லோர் முன்பாகவும் குற்றப்படுத்தி நியாயம் தீர்க்க முந்திக்கொள்கிறோமா? அல்லது நம்முடைய கையில் அவர்களை நியாயம் தீர்க்க நியாயத்தின்படியே கற்கள் இருந்தாலும் அதை எறியும் முன்பாக நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கிறோமா? என சிந்திப்போம். வாயின் வார்த்தைகளால் கூட காயப்படுத்தாமல் இருப்போமாயின் நாம்தான் பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவின் புத்திரராயிருப்போம். பிரியமானவர்களே! இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படி அழைக்கப்பட்டிருக்கிற நாம், அவரைப்போலவே நடக்கும்படி ஒவ்வொருநாளும் பிரயாசப்படவேண்டும். பிறரைக் குற்றப்படுத்த, தண்டனைக்குட்படுத்த, அற்பமாய் எண்ண, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க முந்திக்கொள்ள வேண்டாம். “இயேசுகிறிஸ்து என்னை எவ்வள்ளவாய் மன்னித்துள்ளார். என் பாவத்திற்கு தக்கதாய் உடனுக்குடன் என்னைத் தண்டித்திருப்பாரேயாகில் நான் நிர்மூலமாகியிருப்பேனே!” என்ற எண்ணம் நம் இருதயத்தில் நிரம்பியிருக்கட்டும். இந்த எண்ணம் நம் இருதயத்தில் அடியாழத்தில் இருந்தால் நாம் யாரையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல் அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்களாய் மாறுவோம். ஆம், பாவத்தில் வாழ்வோரிடமும் இயேசுகிறிஸ்துவைப் போல கிருபை பொருந்தின வார்த்தைகளைப் பேசி, அவர்களை கிறிஸ்துவின் பாவமன்னிப்பிற்கு நேராய் வழி நடத்துவோம்











Comments